கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 11

Saturday, August 13, 2016

மண்டையில் வந்த ரத்தத்தைப் பார்த்ததும் கோமலுக்குக் கோபம் வந்ததோ, இல்லையோ, கண்ணனுக்கு செம கோபம் வந்தது. சுவாமிக்கு பொளிச்சுன்னு ஒண்ணு கொடுப்பார் என்று பார்த்தால், சட்டென்று கோமலின் கன்னத்தில் கனல் கண்ணன் ரேஞ்சுக்கு ஒரு அறை விட்டார். கோமல் பொறி கலங்கிப்போய் பார்த்தான். கண்ணன் கோபமாக, “சீனியர்கிட்ட எப்படி பேசணுன்னு அறிவில்ல உனக்கு. இனிமே எதாவது வாய் நீளுச்சு.. கொன்னுடுவேன்” என்று சொல்ல, கோமல் தன் மீது தப்பு இருப்பதை உணர்ந்து அமைதியாக நின்றான். 

கண்ணன் அவனுக்கு ’பர்ஸ்ட் எய்ட்’ பார்த்துவிட்டு,  “பஸ்ஸ புடிச்சு சென்னை வா. அதான் உனக்கு பனிஷ்மெண்ட்” என்றார். தன் சகாக்களோடு, காரில் ஏறிச் சென்றார். கட் பண்ணா, பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்டில் தலையில் கட்டுடன் நின்று கொண்டிருந்தான் கோமல். சென்னை செல்லும் பஸ் ஒன்று கிளம்புவதைப் பார்த்து, அதில் ஏறி உட்கார்ந்தான். அப்போது கரெக்டாக, பவித்ராவிடம் இருந்து போன் வந்தது. போனை எடுத்ததும், ’எங்க இருக்க’ என்று பவித்ரா கேட்க, கோமல் பஸ்ஸில் இருப்பதாகச் சொன்னான். உடனே பவித்ரா, “எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்குடா. ஒரு செல்பி எடுத்து அனுப்பறியா” என்றாள். 

 

தலையில் இருக்கும் பேண்டேஜைப் பார்த்தான் கோமல். ’செம அடி வாங்கி உட்கார்ந்து இருக்கேன், இவ செல்பி எடுக்க சொல்றாளே’ என்று கடுப்பானவன், ’அனுப்ப மாட்டேன்’ என்று சொல்ல, பவித்ரா மறுபடியும் பிரஷர் குடுக்க, வேறு வழி இல்லாமல் ஏற்கனவே ஹோட்டலில் எடுத்த செல்பியை அனுப்பி வைத்தான். 

 

பஸ் ஸ்டாண்டை விட்டு பஸ் வெளிய வந்தபோது, மறுபடியும் பவித்ராவிடம் இருந்து போன். போனை எடுத்ததும், “ஹோட்டல்ல இருந்துட்டே பஸ்ல இருக்கன்னு சொல்ற. நீ சரி இல்ல. வர வர நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சுட்ட. உன்னை நம்பி உட்கார்ந்துட்டு இருக்கேன் பாரு. என்னைச் சொல்லணும். வேணாம்,  இனிமே நமக்குள்ள எதுவும் இல்ல. நான் எங்கப்பா பார்க்கற பையனையே கல்யாணம் பண்ணிக்கறேன்” என்று பவித்ரா நான்-ஸ்டாப்பாக பேசி முடிக்க, எதுவுமே சொல்லாமல் போனை கட் செய்தான் கோமல். பேண்டேஜ் மண்டையோடு ஒரு செல்பி எடுத்து அனுப்பி வைத்தான்.

 

அடுத்த நொடியே, பவித்ராவிடம் இருந்து மறுபடியும் போன். ”ஸாரிடா! என்ன ஆச்சு? ஏன் தலைல கட்டு போட்டு இருக்க” என்று பீலிங்காக கேட்க, கோமல் நடந்ததை ஷார்ட்டாக சொல்லி முடித்தான். உடனே பவித்ரா, “ச்சை! இது தெரியாம உன்னை திட்டிட்டேன். ஸாரிடா செல்லம்” என்று போனிலேயே கண்ணீர் விட, பதிலுக்கு கோமலும் தன்னுடைய நிலைமையை நினைத்து அழுதான். டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டர் அவன் அழுவதைப் பத்தி எல்லாம் கவலைப்படாமல், “தம்பி! டிக்கெட் வாங்கிட்டு அப்புறம் அழுவுப்பா” என்று மனசாட்சியை மார்வாடி கடையில் அடகு வைத்து வந்தது மாதிரி, ’கூலாக’ சொன்னார். அதைக் கேட்டதும், ’இந்த கொடூரமான உலகத்துல நாம எப்படி வாழப் போறோம்’ கோமலின் மனதில் லைட்டாக ஒரு பயம் வந்தது. அந்த பயத்துடனே, அவன் சென்னை வந்து சேர்ந்தான். 

 

’எக்ஸ்பீரியன்ஸ்தான் ஒரு மனுஷனை எக்ஸ்பர்ட் ஆக்கும்’னு சிலர் சொல்வாங்க. அந்த மாதிரி, கோமல் தன் வாழ்வில் நடந்த அந்தச் சம்பவத்தில் இருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டான். ’இனிமே நாக்குல சனி நயாகரா மாதிரி வந்தாலும், வாயைத் தொறக்கக் கூடாது’ங்கறதுதான் அந்தப் பாடம். அப்புறம் அதை கரெக்டா பாலோ பண்ணவும் ஆரம்பித்தான். 

 

ஒரு வழியாகப் படத்தின் கதை விவாதம் எல்லாம் முடிந்து, ’மேக்கிங் ரெபரன்ஸ்’ எடுக்கும் வேலையை ஆரம்பிச்சாங்க. அடுத்த ஒரு வாரத்துக்கு கொரியன் , இங்கிலீஷ், லத்தீன், ஸ்பானிஷ்னு உலக சினிமா டிவிடிக்கு நடுவில்தான் கோமல் குடும்ப நடத்த வேண்டியிருந்தது. ஆரம்பத்தில், இந்த ரெபரன்ஸ் எடுக்கற கான்செப்ட் கோமலுக்குப் புரியவே இல்லை. ’அதான் கதை எழுதியாச்சு இல்ல. அதைப் போய் ஷூட் பண்றதை விட்டுட்டு, எதுக்கு இந்த உலக சினிமா எல்லாம் பாக்கணும்’ என்று யோசித்தான். ’ரெபரன்ஸ் மட்டும் இல்லன்னா, இப்ப இருக்கற பெரும்பாலான டைரக்டர்கள் சேல்ஸ் ரெப் வேலை பார்க்கத்தான் போகணும்’ என்று அவனுக்குக் கொஞ்சம் லேட்டாகப் புரிந்தது. 

 

இங்கிலீஷ் , கொரியன் படங்களில் இருந்து கதையைச் சுடுவது ஒரு கலை என்றால், காட்சியைச் சுடுவது இன்னொரு கலை. சிம்பிளாக, அதை ரெபரன்ஸ் அப்படின்னு சொல்லிடுவாங்க. ஒரு சீன் எடுக்கத் தேவையான லொக்கேஷன்ல இருந்து லைட்டிங், பின்னாடி இருக்கக்கூடிய பிராப்பர்ட்டீஸ், ஆர்ட்டிஸ்ட் போடற டிரஸ் என்று ஒவ்வொன்றையும் பல படங்களில் இருந்து தனித்தனியாக எடுத்து, அதை ஒரு படமாக எடுப்பதுதான் இந்தக் கலை. 

 

பொதுவாக, ஸ்கிரிப்ட் பேப்பரில் இருப்பதை விஷூவலாகக் கொண்டு வருவதுதான் ஒரு இயக்குனருக்கு ஆகப்பெரிய சவால். அந்த சவாலில்தான், பல இயக்குனர்களின் வெற்றியே அடங்கி இருக்கிறது. 

 

”ஆனால், அம்பானி குடுத்த 500 ரூபா போன் மாதிரி இப்ப உலக சினிமா எல்லாருக்கும் ஈஸியா கிடைக்கறதால, டைரக்டர்கள் அவங்க யோசிக்கற சீனை, ஏற்கனவே வந்த படங்கள்ள இருந்து பார்த்து ஈஸியா எடுக்க முடியுது. அதுவும் சில இயக்குனர்கள் இப்பல்லாம் ரொம்ப அலட்டிக்கறதே இல்ல, கூலா ஒரு இங்கிலீஷ் படத்தோட பைட் சீனை எடுத்துக்காட்டி, ’மாஸ்டர்! நீங்க ஒண்ணும் பண்ண வேணாம். இதை அப்படியே எடுத்துக் குடுத்துடுங்க போதும்’னு சொல்ற அலப்பறை நிறைய நடக்குது. இன்னும் உச்சக்கட்டமா, ஒரிஜினல் இங்கிலீஷ் படத்துல இருக்கற சீனை ஷூட் பண்ணும்போது, யதேச்சையா ஒரு நாய்க்குட்டி பின்னால வந்திருக்கும். அதை ஏதோ ஒரு குறியீடு மாதிரி பீல் பண்ணிக்கிட்டு, இங்க ஷூட் பண்ணும்போதும் அதே மாதிரி ஒரு நாய்க்குட்டிய பின்னாடி நடக்க விடுவாங்க நம்ம ஆளுங்க” என்று அறிந்துகொண்டான் கோமல். கண்ணன் அந்த அளவுக்கு இல்லை என்றாலும், அவரும் ஒவ்வொரு சீனுக்கும் நிறைய ரெபரன்ஸ் எடுத்துப் பார்த்தார். அதைப் பார்த்ததும், ’சினிமா முன்ன மாதிரி பெரிய கம்ப சூத்திரம் எல்லாம் இல்ல, கொஞ்சம் ஸ்மார்ட்டா இருந்தா படம் எடுக்கறது பால்கோவா சாப்பிடற மாதிரி’ என்பதைக் கோமல் புரிந்துகொண்டான். 

 

”ஹீரோவும் ஹீரோயினும் முதன்முதலாக ஒரு பாரில் சந்திக்கிறார்கள் என்று ஸ்கிரிப்ட் பேப்பரில் இருந்தால், அந்த மாதிரி சீன் ஏற்கனவே கொரியன் படம், ஸ்வீடன் படம், மலாய் படம்னு ஏதோ ஒண்ணுல வந்து இருக்கும். அதைத் தேடிக் கண்டுபிடிப்பது முன்பு கஷ்டமாக இருந்தது. ஆனால், இப்போது அந்த வேலையும் சுலபமாகிவிட்டது. ’காலைல கடை தொறக்கறதுக்கு முன்னாடியே போய் ஷட்டரைத் தட்டுற குடிகாரன் மாதிரி, இப்பல்லாம் எந்திரிச்சதும் ஒரு உலக சினிமாவைப் பாத்துட்டு அதுக்கப்புறம் உச்சா போறாங்க சில அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ். பாட்ஷா ஸ்டைல்ல சொல்லனும்னா, ’ஒரு சிச்சுவேஷன் சொன்னா நூறு ரெப்ரன்ஸ் சொல்ற’ உதவி இயக்குனர்கள், ஒவ்வொரு டீம்லயும் ஒருத்தர் ரெண்டு பேராவது இருக்காங்க” என்று மனதிற்குள் பேசிக்கொண்டான் கோமல். 

 

கண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்த வீரா, கிட்டத்தட்ட இந்த கேரக்டர்தான். ஒரு வாரம் உட்கார்ந்து பார்த்து, படத்தில் இருக்கிற 76 சீனுக்கு 7500 ரெப்ரன்ஸ் சீன்ஸ் எடுத்து வைத்துவிட்டான். ஓவராக உலக சினிமா பார்த்துப் பார்த்து, கிளாஸ் எதுவும் போகாமலேயே கொரிய பாஷை , கொரில்லா பாஷை எல்லாம் பேசும் அளவுக்கு ’டெவலப்’ ஆகிவிட்டான். அதனால், கண்ணனின் டீமில் வீராவுக்குத் தனி மரியாதை. யாராவது ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டர் புதிதாக ஒரு கதை யோசித்தால், அதை வீராவிடம் சொல்வார்கள். உடனே அவன், 10 படத்தின் பெயரைச் சொல்லி, அதனைப் பார்க்கச் சொல்வான். வீராவைப் பாகுபலியாகவும், தங்களை கட்டப்பாவாகவும் பீல் பண்ணி மரியாதை செலுத்திவிட்டுச் செல்வார்கள் வந்தவர்கள். 

 

இதையெல்லாம் பார்த்த பிறகு, ’இனிமே நாமளும் டெய்லி ரெண்டு உலக சினிமா பாக்கறோம், தட்டி தூக்கறோம்’ என்று கோமல் முடிவெடுத்தான். அதற்காகவே, வீராவிடம் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்க் முழுவதும் 2864 படத்தைக் காப்பி பண்ணி வாங்கினான். அன்றிரவே, ஆபிஸில் உட்கார்ந்து, வீராவின் ஆலோசனையின் படி, முதல் படமாக அகிரா குரசோவாவின் ’செவன் சாமுராய்’ பார்க்க ஆரம்பித்தான். அடுத்த ரெண்டாவது நிமிஷமே, கோமல் குழம்பிப் போய்விட்டான். படத்தைப் பார்த்தால், சப் டைட்டில் படிக்க முடியவில்லை. சப் டைட்டிலைப் படித்தால், படத்தைப் பார்க்க முடியலை. சப் டைட்டில் முயல் வேகத்துல போனால்,  கோமல் அதை நிறுத்தி.. நிறுத்தி.. ஆமை வேகத்தில் படித்துக் கொண்டிருந்தான். ஒரு அஞ்சு நிமிஷ படம் பார்க்கறதுக்கே, அவனுக்கு ரெண்டு மணி நேரம் ஆகியிருந்தது. ’இப்படிப் படம் பாத்தா, இந்த ஹார்ட் டிஸ்குல இருக்கற 2864 படத்தைப் பார்க்கவே ரெண்டாயிரம் வருஷம் வேணுமே’ என்று கோமலின் மனதில் தோன்றியது. அதுவும் இல்லாமல், கோமலிடம் இருந்த ஆங்கில அறிவுக்கு முன்னால் அந்த சப் டைட்டில் விஸ்வரூபமெடுத்தது. புரிய மறுத்தது. 

 

டிப்ளமோ படிக்கும்போது, ’இங்கிலீஷ் எக்ஸாமையே தமிழ்ல எழுத முடியுமா?’ என்று ஆப்ஷன் தேடியவன் தான் இந்த கோமல். ’திடீர்னு அவனை இப்படி இங்கிலீஷ் படிக்கச் சொன்னா, எப்படிப் படிப்பான்?’ இதை யோசித்துப் பார்த்த கோமல், கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்துவிட்டு, அமைதியாகப் போய் படுத்து தூங்கிவிட்டான். 

 

அடுத்த நாள் கோமல் தனது பிரச்சனையை வீராவிடம் சொல்ல.. உடனே, “இங்க பாரு. ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். பக்கத்துல டிக்‌ஷனரி வெச்சுக்கோ, புரியாத வார்த்தைய டிக்‌ஷனரில பாரு. கொஞ்ச நாள் போனா, தானா புரிய ஆரம்பிச்சுடும்” என்றான் வீரா. அதையும் நடைமுறைப்படுத்திப் பார்த்தான் கோமல். ஒரு படம் பார்க்க, ஒரு வாரம் ஆகியது. கோமலுக்குத் தனது நிலைமையை நினைத்து கோபம் வந்தது. பவித்ராவுக்கு போன் பண்ணி, ’ஸ்கூல்ல இங்கிலீஷ் பாடம் எடுத்த லீலாவதி டீச்சர்னால, இப்ப தன் வாழ்க்கையே கெட்டு போயிடுச்சு’ என்று கதறி அழுதான். பவித்ரா உடனே, “இங்க பாரு.. உனக்கு இங்கிலீஷ்தான வரலே.. ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போ.. ரெண்டு மாசத்துல செட் ஆயிடும்” என்று அவனுக்கு ஐடியா சொல்ல, கோமலும்  அதை ஏற்றுக்கொண்டான். 

 

அடுத்த நாளே, வடபழனி ஏரியாவில் தேடிக் கண்டுபிடித்து, ஆக்ஸ்போர்ட் ஸ்போக்கன் இங்கிலீஷ் அகாடமியில் ஜாயின் பண்ணான் கோமல். ஒரு வருங்கால இயக்குனர் வாழ்க்கையில், மறுபடியும் ’ஏ பார் ஆப்பிள்’ படிக்கிற கொடுமையை உணராமல், கோடம்பாக்கம் அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருந்தது. கோமலின் கலைப்பயணம் தொடரும்... 

- சந்துரு

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles