கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 12

Wednesday, August 31, 2016

ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் ஆரம்பிச்சு ஒரு வாரம் ஆகி இருந்தது. அந்த ஒரு வாரமும், ’ஏ பார் ஆப்பிள்’னு ஆங்கில எழுத்துக்களையே சொல்லிக் கொடுத்திட்டு இருந்தாங்க. கோமல் கடுப்பாகி, “சார்.. இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். நான் பேசறதுக்கு மட்டும் சொல்லி குடுங்க போதும்”னு சொன்னான். கிளாஸ் எடுத்துட்டு இருந்த டீச்சர். அவனைப் பார்த்தார். “உனக்கு தெரியும். பின்னாடி உட்கார்ந்து இருக்காரே ஆட்டோ டிரைவர் ஆறுமுகம், அவருக்கு தெரியுமா? ஒரு பேட்ச்னா ஆர்டராதான் போவோம்”னு பதில் சொன்னார்.

வேறு வழி இல்லாமல், கோமல் மறுபடியும் ’ஏபிசிடி’ படிக்க ஆரம்பித்தான். வாட்ச் மெக்கானிக் சூர்யாவை, திடீர்னு டைம் மிஷின்ல மூன்றாம் கிளாஸூக்கு கூட்டிட்டு போய் உட்கார வெச்ச மாதிரியான மனநிலையில், அங்கு கோமல் உட்கார்ந்திருந்தான். 

 

கிளாஸ் முடிந்ததும், ஆட்டோ டிரைவர் ஆறுமுகமுகத்துடன் ஆட்டோவில் ஆபிஸ் கிளம்பினான் கோமல். ஆட்டோ ஓட்டிகிட்டு இருந்த ஆறுமுகத்துக்கு, அவர் பொண்டாட்டிகிட்ட இருந்து கால் வந்தது. அவரும் கூலா, “வந்துட்டு இருக்கம்மா. கூட, என் கிளாஸ்மேட்டும் வர்றாரு. வழில அவரை ட்ராப் பண்ணிட்டு வந்துடறேன்”னு சொல்லி போனை ’கட்’ பண்ணார். ’நைட்டு ரெண்டு கிளாஸ் சரக்கு போட்டுட்டு மட்டையாகற வயசுல, தன்னை கிளாஸ்மேட்னு சொல்றாரே’ என்று நினைத்த கோமலின் மனதில், அவர் மீது வன்கொடுமை சட்டத்தில் கேஸ் போட வேண்டுமென்று தோன்றியது. அந்த பீலிங்குடன் ஆறுமுகத்தைப் பார்த்து, “ஏண்ணே! நாந்தான் சப்டைட்டில் படிக்க முடியல, ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வர்றேன். உனக்கு எதுக்கு இதெல்லாம்?” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டான் கோமல். ”தம்பி, நான் தாஜ் ஹோட்டல் ஆட்டோ ஸ்டேண்டு. வர்றது புல்லா பாரின் கஸ்டமர்ஸ். அவங்ககிட்ட இங்கிலீஷ்ல பேசுனாதான், சவாரி வெயிட்டா கிடைக்கும். அதான் கிளாஸ் வந்துட்டு இருக்கேன்” என்று மிகவும் அமைதியாகப் பதில் சொன்னார் ஆறுமுகம். 

 

அவருடைய ஆர்வத்தையும் வாழ்க்கையில முன்னேறனுங்கற லட்சியத்தையும் பார்த்து, கோமல் அவருடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். அதாவது, இனிமே அவரும் கோமலும் பேசும்போது, இங்கிலீஷ்ல மட்டும்தான் பேசணும். இதான் அந்த உடன்படிக்கை. சோகம் என்னன்னா, இந்த உடன்படிக்கைக்கு அப்புறம் அவங்களுக்குள்ள பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது. காரணம், அந்த உடன்படிக்கையில் இருந்த ’பேசுனா இங்கிலீஷ்லதான் பேசணும்’ என்ற ஒரே ஒரு வார்த்தைதான். ஆனால், தினமும் கிளாஸூக்குச் செல்லும்போது ஆறுமுகமும் கோமலும் முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன்லயே பேசிப்பாங்க. அதை மட்டும் மணிரத்னம் பார்த்திருந்தால், இன்னொரு மெளன ராகம் ரெடி ஆகியிருக்கும். இப்படி, கோமலோட இங்கிலீஷ் கிளாஸ் இண்ட்ரஸ்டிங்கா போய்க் கொண்டிருக்கும்போது, கோமலின் ஸ்போக்கன் இங்கிலீஷ் புரபசர் பீட்டர் சாருக்கு, ’அவன் ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டர்’ங்கற மேட்டர் தெரிந்தது. 

 

அடுத்த நாள் கோமல் கிளாஸ் போகும்போது, பீட்டர் அவனைத் தனியாக ஒரு ரூமுக்குள் அழைத்துச் சென்றார். ’இந்த ஆள் எதுக்குடா நம்மள தனியா இந்த ரூமுக்குள்ள கூட்டிட்டு வந்து இருக்காரு’ன்னு கோமல் பீதி ஆகி நிற்க, பீட்டர் திடீரென்று பில்லாவாக மாறினார். “நாம வாழணுன்னா, யாரை வேணாலும் எத்தனை பேரை வேணாலும் கொல்லலாம்’னு டயலாக் பேசுனாரு. கோமல் ஒரு செகண்ட் ஜெர்க் ஆகி, ’இந்த ஆள் வாழ, நாம ஏன் சாகணும்’ அப்படின்னு யோசிக்கும் போதே, பீட்டர் பில்லா மோடில் இருந்து அப்படியே வேலு நாயக்கரா மாறினார். “ தப்பு எதுவுமே தப்பு இல்ல. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்ல’ன்னு அடுத்த டயலாக்கைச் சொல்ல, கோமல் குழம்பிப்போய் அவரைப் பார்த்தான். பீட்டர் பல கேரக்டர்களாக விஸ்வரூபம் எடுத்து, கடைசியாக விஸ்வரூபம் கமலாக மாறி நின்றார். கோமலுக்கு, அப்போதுதான் அவரோட கலை ஆர்வம் புரிந்தது. 

 

நடிக்கணும்கற ஆசையைச் சொல்லி, எப்படியாவது அவன் வேலை பார்க்கும் படத்துல ஒரு ரோல் வாங்கிக் கொடுக்கச் சொல்லி, கோமலிடம் கெஞ்சினார் பீட்டர். கோமலும் கண்ணனிடம் சொல்லி, அவருக்கு ஒரு கேரக்டர் வாங்கி தருவதாக வாக்கு கொடுத்தான். உடனே, அவனது ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கட்டணத்தில், 100% டிஸ்கவுண்ட் கொடுத்தார் பீட்டர். கூடவே, ‘உன்னை 30 நாள்ல பிரிட்னி ஸ்பியர்ஸ் மாதிரி இங்கிலீஷ் பேச வெக்கறது மட்டும் இல்ல, பாடவே வெக்கறேன்’னு கோமலிடம் வாக்குறுதி வேறு தந்தார். 

 

இப்படி, கோமலின் இங்கிலீஷ் லெர்னிங் கேரியர் Pencil is a noun ஸ்டேஜ் வரும்போது, படத்தோட ஷூட்டிங்கும் ஸ்டார்ட் ஆச்சு. கோமலுக்கு ஷூட்டிங்கில் கொடுக்கப்பட்ட வேலை கிளாப் அடிப்பது. 

 

இந்த இடத்துல, கிளாப் அடிக்கறதைப் பத்தி சொல்லியே ஆகணும். பொதுவாக, ஒரு படத்துல கிளாப் அடிக்கறது, அந்த படத்தோட கடைசி அஸிஸ்டெண்ட் தான்.  கிளாப் அடிக்கறது, கொஞ்சம் சிக்கலான வேலை. கேமராவில் என்ன லென்ஸ் இருக்கோ, அதுக்கு தகுந்த மாதிரி தூரத்துல கிளாப் போர்டை வைத்துக்கொள்ள வேண்டும். சில சமயம் நடிக்கற ஆர்ட்டிஸ்டுக்கும் கேமராவுக்கும் இடையில ரொம்ப தூரம் இருக்கும். ஆனால், கேமிராவில் இருக்கும் லென்ஸ் குளோஸ் அப் ஷாட்டுக்கானதாக இருக்கும். அது தெரியாமல், கிளாப் போர்டைக் கொண்டுபோய் நடுவில் நீட்டக்கூடாது.  கோமலுக்கு ஷூட்டிங் ஆரம்பித்த முதல் ஒரு வாரத்திற்கு, இந்த லென்ஸ் மேட்டர் கோமலுக்குப் புரியவே இல்லை. 

 

‘ஷாட் ஓகே’ன்னா, கோமல் ’டக்கு’ன்னு கிளாப் போர்டை எடுத்து நீட்டுவான். அவன் நீட்டும் இடம், பிரேமில் இருக்காது. அடுத்த நொடியே, ”ஏண்டா, அமெரிக்கால ஷாட் வெச்சா, நீ ஆப்பிரிக்கால கிளாப் குடுத்துட்டு இருக்க” என்றவாறே, கேமராமேனிடம் இருந்து அசிங்கமான நான்கு ’பீப்’ வார்த்தைகள் கோமலை நோக்கி வரும். 100 பேர் முன்னால் திட்டு வாங்கறது, முதலில் கோமலுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. கண்ணனிடம் சொன்னால், ”ஷூட்டிங் ஸ்பாட்ன்னா அப்படித்தாண்டா இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணி வொர்க் பண்ணு”ன்னு சொல்லிட்டார். அதன்பிறகு ஒரு வாரத்திற்குள் கோமல் கொஞ்சம் தெளிவானான். திட்டு வாங்கறதும் கொஞ்சம் குறைந்தது. ’அப்பாடா’ன்னு கொஞ்சம் நிம்மதியா வேலை பார்க்க ஆரம்பித்தான் கோமல். 

 

ஒரு வாரம் டயலாக் சீன்ஸ் கொஞ்சம் முடிந்தது. அடுத்த வாரம் முழுக்க, ஆக்‌ஷன் சீன்ஸ் எடுக்க ஆரம்பிச்சாங்க. கேப்டன் போடுற லெக் பைட் எல்லாம் பார்த்து பிரமித்து, சினிமாவுக்கு வந்தவன் கோமல். ஆனால், பைட் சீன் எடுப்பதைப் பார்த்தபோது, அவனுக்கு சிரிப்பு வந்தது. ’ஒருத்தனும் நிஜமா அடிக்க மாட்டங்கறான்.  ஒரு சின்ன ஜம்ப் பண்ணம்னா கூட, ஹீரோ டூப் போடறாரு. ஆக்‌ஷன் சீன்ல பயரே இல்ல. இந்த பைட் மாஸ்டர் என்னடா எடுக்கறாரு’ன்னு தன்னுடன் இருந்த இன்னொரு அஸிஸ்டெண்ட் டைரக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தான் கோமல். அது, பின்னால் இருந்த பைட் மாஸ்டர் காதில் விழுந்தது. ஆனால், மனுஷன் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. 

 

அடுத்த நாள் காலையில் ஷூட்டிங் வந்ததும், கோமல் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். பைட் மாஸ்டர், அப்போதுதான் வந்து இறங்கினார்.  இறங்கியதும் அவரது கண்கள் கோமலைத் தேடியது. அப்போதுதான் பொறுப்பாக, சீன் பேப்பர் எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தான் கோமல். பைட் மாஸ்டர் டைரக்டர் கண்ணன் அருகில் சென்றார். “சார், அந்த டெரரிஸ்ட் கேரக்டருக்கு உங்க அஸிஸ்டெண்ட் கோமல் பர்பெக்டா இருக்குறான். அவனை இந்த ஆக்‌ஷன் சீக்வன்ஸ்ல யூஸ் பண்ணிக்கவா”ன்னு கேட்டார். ’கோமல் எப்படிர்றா டெரரிஸ்ட் கேரக்டருக்கு செட் ஆவானான்’னு கண்ணனுக்குக் குழப்பம். “சார் அவன் செட் ஆக மாட்டான். பைட்டர்ஸ்ல யாரையாவது போட்டுருங்க சார்”னு சொன்னார். உடனே, பைட் மாஸ்டர் “கண்ணா! அந்த பையனோட பாடி லாங்வேஜ் அந்த கேரக்டருக்கு பக்காவா செட் ஆகுது. அவன் கண்ல பயங்கரவாதம் படுபயங்கரமா தெரியுது. அவந்தான் சரியான சாய்ஸ்”னு சொல்லிட்டாரு.

 

கண்ணன் திரும்பி கோமலைப் பார்த்தார். அவன் கண்ணில், பைட் மாஸ்டர் சொன்ன மாதிரி பயங்கரவாதம் ஒன்றும் தெரியவில்லை. ’சீனியர் பைட் மாஸ்டர் சொல்றாரு. ஒருவேளை நம்மளுக்கு தெரியாதது, அவருக்கு எதோ தெரியுது போல. நமக்கு எதுக்கு வம்பு’ன்னு நினைத்தார் கண்ணன். அந்த கேரக்டருக்கு கோமலையே யூஸ் பண்ணிக்கச் சொல்லிவிட்டார். விஷயத்தைச் சொன்னதும், கோமல் சந்தோஷமாக ’ஓகே’ என்றான். 

 

கட் பண்ணா, அடுத்த ஷாட்ல கோமலை ஒரு கயிறில் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தாங்க. பைட் மாஸ்டர் ’ஆக்‌ஷன்’னு கத்த, ஹீரோ ஒரு பக்கெட் தண்ணீரை ’பளார்’னு கோமல் மூஞ்சியில் ஊற்றிவிட்டு, “எங்கம்மா எல்லாம் எனக்கு சும்மாடா. என் நாடுதாண்டா எனக்கு அம்மா”ன்னு ஆரம்பிச்சு, கேப்டன் ஸ்டைலில் மூன்று பக்க டயலாக் பேச வேண்டும். நடுநடுவில், கோமலை அடிக்க வேண்டும். பைட் மாஸ்டர் ’சிங்கிள் டேக்’ என்று சொன்னதால், ரீடேக்.. ரீடேக்காக.. போய்க்கொண்டே இருந்தது. மூன்று லாரி தண்ணீர் காலியானது. அப்போதும் அந்த டேக் ஓகே ஆகவில்லை. ஷாட் பிரேக்கில் எல்லாரும் டீ , காபி குடிக்கும்போதும் கூட, கோமல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தான். நடிக்கச் சொன்னதும் ஆர்வமாக ஓடோடி வந்த கோமலுக்கு, பைட் மாஸ்டர் போட்ட ஸ்கெட்ச் தெரியவே இல்லை. தலைகீழாகத் தொங்கியவாறே, கண்ணனைக் கூப்பிட்டுக் கதறினான் கோமல். ”கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா”ன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டார் கண்ணன். முதல் நாள் ஷூட் முடியும்போதே, கோமல் கிட்டத்தட்ட கொத்து பரோட்டா மாதிரி ஆகியிருந்தான். ஆனாலும் பைட் மாஸ்டர் விடவில்லை. 

 

மூன்று நாளில் மொத்தம் முப்பது லாரி தண்ணீரை கோமலின் மூஞ்சியில் ஊற்றியபிறகே, அந்த சீனை முடித்தார் பைட் மாஸ்டர். கட் பண்ணா, கோமல் சூர்யா ஹாஸ்பிடலில் 108 டிகிரி ஹை பீவரோட கண்ணை மூடிப் படுத்திருந்தான். தலையில் இமயமலையை தூக்கிவைத்த மாதிரி ஒரு பீலிங். அப்போதுதான், கோமல்னு ஒரு வாய்ஸ் கேட்டது. அப்படியே கஷ்டப்பட்டு, கண்ணைத் திறந்து பார்த்தான். எதிரில், பைட் மாஸ்டர் நின்று சிரித்துக் கொண்டிருந்தார். கோமலுக்கு அவர் முகத்தைப் பார்த்ததும், மறுபடியும் கண்கள் செருகின. அப்படியே மயக்க மோடுக்குப் போனான். டாக்டர் வந்து பாத்துட்டு “ஹீ இஸ் இன் ஹோமா ஸ்டேஜ்”னு சொன்னார். கோமலின் கலைப்பயணம் தொடரும்...

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles